-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, June 5, 2018

எழுத்து எனும் வேள்வி

எழுத்து எனும் வேள்வி

எழுதுங்கள். விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள்.

வாழ்க்கையை எளிய முறையில் இனிமையாக அனுபவிக்க எழுதுங்கள். உங்களுடைய எண்ணங்களை எழுதுங்கள். உங்களின் கை எழுத்துக்கு உங்களின் தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி உண்டு. மனதில் உள்ள அழுக்குகள் வெளியேற எழுதுங்கள். மனதில் உள்ள கவலைகள் மறைய எழுதுங்கள்.  யாரிடமும் பேசக் கூசுகின்ற வாரத்தையை அறவே அகற்ற எழுதுங்கள். எழுதுங்கள் எழுதுங்கள் உங்களின் எண்ணங்கள் துாய்மைபெற எழுதுங்கள்.  விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள். விடைகள் தெரியாத வினாக்களை எழுதுங்கள். சொல்ல முடியாத சோகங்களை எழுதுங்கள்.  துடிக்க வைக்கும் வலிகளை எழுதுங்கள்.  யாரிடமும் சொல்லி சந்தோசப்பட முடியாத அற்ப சந்தோசங்களை எழுதுங்கள்.  எழுதுங்கள் எழுதுங்கள் .. மனம் அமைதி பெற எழுதுங்கள்.

இங்கே நீங்கள் எழுதுவது உங்களை புகழ் அடையச் செய்ய அல்ல. உங்களின் எழுத்துக்களை அடுத்தவர்கள் படித்து பாராட்ட அல்ல. எந்த விதமான எதிர்வினையில்லாமல் உங்களின் வினையை அனுபவிக்க எழுதுங்கள்.  விதியை அனுபவித்தல் ஒன்றே விதியை வெல்ல மிகச் சரியான வழி.   உங்களின் எண்ணங்கள் துாய்மையானால் செயல்கள் துாய்மையாகும். உங்களின் செயல்கள் துாய்மையானால் விளைவுகளும் நிச்சயம் நன்மையை மட்டுமே தரும்.
உங்களின் எண்ணங்கள் துாய்மையாக மனம் சுத்தமாக இருக்க வேண்டும். மனம் சுத்தமாக மனதில் அவ்வப்பொழுது எழக்கூடிய கெட்ட எண்ணங்களை அறவே அழித்துவிட வேண்டும்.  அதற்கான ஒரு செயல்தான் எழுதுதல். அதற்காக உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். பின்விளைவுகளைத் தராத செயல் தான் வேண்டும்.


ஏன் எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? எதையெல்லாம் எழுத வேண்டும்? எழுதுவதால் என்ன பலன்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள்  எழும்.    உங்களுக்குள் எழும் அனைத்து கேள்விகளையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்திருங்கள். விடைகள் ஒவ்வொன்றாக வரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி