-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, August 13, 2014

பேசக்கூடாத ஜாதகமும் பரிகாரங்களும்.

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கு தகுந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அதே போலத்தான் மனிதனும் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழிகளைக் கையாள்கிறான். மௌனத்தையும் மொழியாக்கியவன் மனிதன்.  தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவன் எந்த எல்லையையும் தாண்டத் தெரிந்தவன். வாயால் பேசித்தான் எந்தத் தேவையையும் பெற முடியும் என்பதில்லை. கண்களால் காதல் பரிமாற முடியும். உதடுகளால் காமத்தை தெரிவிக்க முடியும். பெருமூச்சால் ஏக்கத்தை வெளிப்படுத்த முடியும். அங்க அசைவுகளால் அனைத்தையும் தெரியப்படுத்த முடியும் என்கிற நிலையில் பேச்சு எப்படி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன  தொடர்பு என்பதை இங்கு காணலாம்.

மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது பேச்சு.  உண்மையைப் பேசி வம்பில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு. பொய்யே பிரதானமாகக் கொண்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு. நமக்கு விதிக்கப்பட்டதை அறிந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி உண்டாகும்.   தனிமனிதனுக்கு விதிக்கப்பட்டதை ஜோதிடம் எடுத்துக் காட்டுகிறது.

ஜாதகத்தில் இலக்கிணத்திற்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம்.  வாக்கு ஸ்தானத்தில் சுப கிரகஙகள் சுப சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் அந்த ஜாதகருடைய பேச்சால் பலனும் பயனும் உண்டு. பலன் அவருக்கு பயன் அடுத்தவர்களுக்கு. அதே சமயம் இரண்டாம் இடம் பகை நீசம் பெற்று பாபர் சேர்க்கை பெற்றால் அவருடைய பேச்சால் அவருக்கும் பலனில்லை அடுத்தவருக்கும் பயனில்லை.

இரண்டாம் இடம் சனியின் நற்பார்வையைப் பெற்றால் ஜாதகர் வாக்கினால் பலனைடைவார். அதுவே சனியின் தீய பார்வை இருப்பின் ஜாதகரின் பேச்சால் எப்பொழுதும் கலகம் தான். அதே ஜாதகம் ஆறாம் அதிபதியின் சேர்ககை அல்லது பார்வைபெறின் இயற்கையிலே திக்குவாய் அல்லது பேச்சு வராத நிலையைக் கொடுக்கும்.  இரண்டாம் இடம் 6, 8, 12ம் அதிபதிகளால் பார்க்கப்பட்டால் சரியான நேரங்களில் சரியான வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிடைப்பதை விட்டுவிடுவார்கள்.

இது போன்ற ஜாதகர்கள் பேசுவதைவிட பேசாமல் இருப்பது சிறந்தது. அதாவது பேச்சினால் சரியான எதையும் சாதிக்க இயலாது. அதேசமயம் எதிர்மறை எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு அவர்கள் பேச்சு பயன்படும். இவர்கள் சந்திராஷ்டம தினங்களினல் மௌன விரதம் அனுசரிப்பது பலன் தரும்.  மேற்கூறிய ஜாதக நிலையில் உள்ளவர்கள் பேசுவதை விட எழுதுவதை அதிகரிக்கலாம். காரணம் இவர்களுக்கு தன்நிலையை விளக்க சரியான சொற்களைப் பயன்படுத்த தெரியாது. அதே சமயம் யோசித்து நிதானித்து எழுவதால் அவர்களுடைய எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த முடியும். பேச்சைக் குறைத்துக் கொண்டால் ஆயுள் கூடும் காரணம் 2ம் பாவம் மாரக ஸ்தானமும் ஆகும். குடும்பததில் குழப்பம் நீங்கும். அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி