-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, July 9, 2014

ஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை.

ஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை. 
வேதஜோதிடம் – ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் ஒரு தனித்துவம் கொண்ட முறையைக் கையாள்கிறது. நடைமுறை வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை உள்ளடக்கிய பலன் கூறும் முறையை வேதஜோதிடம் பின்பற்றுகிறது. ஜோதிடப் பலன்கள் எல்லாம் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது தான் அதில் மாற்றம் எதுவும் இல்லை. அதனை எடுத்துக் கூறும் முறைதான் நவீன காலத்தியதாகவும் எளிதில் புரிந்து தெளிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் பத்து பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு மட்டுமே. கல்வி முறையில் மாற்றம் வந்துள்ளது. பட்டப்படிப்பே பெரிதாக இருந்த நிலையில் இன்று கண்டம் விட்டு கண்டம் சென்று கல்வி பயிலும் நிலையில் உள்ளோம். கூட்டுக்குடும்பம் அதிகம் இருந்த காலம் போய் தனிக்குடித்தனம் அதுவும் தனித்தனிக் குடித்தனம் நடத்தும் காலம் வந்துவிட்டது. கலாச்சாரம் பண்பாடு என்று கூறப்பட்டவையெல்லாம் இன்று நவீனத்துவம் பெற்று வருகின்றன.

இந்த சமுதாய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அதே சமயம், மாற்றங்களுக்குத் தக்கவாறு பிரச்சனைகள் புதிதாக உருவெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. புதிது புதிதாக நோய்கள் வருவகின்றன. சட்டதிட்டங்கள் மாறுகின்றன. வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் பிரச்சனைகளும் புதிதுபுதிதாக ஏற்படத்தான் செய்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளையும் புதிய முறையில் கையாள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இது அனைத்துத் துறைக்கும் பொருந்தும். ஜோதிடத்திற்கும் பொருந்தும்.

பதினாறு வயதில் மன்னாகக்கூடிய கிரக சூழ்நிலைகளை ஜோதிடம் வரையறுத்துள்ளது. மன்னராட்சி காலத்தில், வாரிசுகளுக்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் அந்த பலன்கள் பொருந்தும். இன்று அது சாத்தியமில்லை. அப்படி என்றால் பலன்கள் பொய்த்துவிட்டாதா என்றால் சத்தியமாக இல்லை. மன்னராட்சி முறைதான் மாறிவிட்டதே தவிர மன்னனுக்குரிய தகுதிகள் என்பது மாறவில்லை. நினைத்ததை வாங்கக்கூடிய பணபலமும், சொன்னதை செய்யக்கூடிய ஆள்பலமும் இருந்தால் அவரும் மன்னர்தான். இன்று அப்படிப்பட்ட மன்னர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் வாரிசுகளும் பதினாறு வயதில் தனக்கென்று ஒரு நிலையை அடையத்தான் செய்கிறார்கள்.

பலதார திருமணத்திற்கான கிரக சூழ்நிலைகளை ஜோதிடம் வரையறை செய்துள்ளது. மூன்று தலைமுறைக்கு முன்னால் காலங்களில் சர்வ சாதாரணமாக இருந்த இந்தமுறை இன்று பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டது. ஆனால் ஜோதிடம் பொய்க்கவில்லை. அன்று வெளிப்படையாக நடந்த ஒரு நிகழ்வு, இன்று திரைமறைவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது அதை பகிரங்கமாக பொதுவில் நிறுபணம் செய்யமுடியாது என்பது அனைவரும் அறிந்தசெய்தி தான்.

குலத்தொழில்களையே அதிகம் செய்து கொண்டிருந்த காலங்கள் கடந்து இன்று அனைவரும் அனைத்து தொழில்களிலும் பங்கெடுக்கக்கூடிய நிலைவந்துவிட்டது. இந்நிலையில் ஜோதிடத்தின் மூலம் தொழிலை நிர்ணயம் செய்யும் முன்பு அனைத்துவகையான முக்கிய தொழில்களையும்  அறிந்திருத்தல் அவசியமாகிறது.. ஜோதிடத்தின் பன்னிரெண்டு பாவங்களும் மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளைப் பற்றியும் எடுத்துக்கூறுகிறது. முன் ஜென்மம் முதல் மறுஜென்மம் வரையில் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் ஜோதிடம் எடுத்துக் கூறுகிறது.

இந்நிலையில், ஜாதகருக்குத் தேவைப்படும் முழு விபரத்தையும் கொடுக்க வேண்டுமானால் ஜோதிடமும் நிகழ்காலத்தில் பயணிக்க வேண்டும். அதைத் தான் வேதஜோதிடம் செய்து கொண்டிருக்கிறது. பிரச்சனைகளை முழுமையாக ஆராய்ந்து சமூக பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பதில்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கு உங்களின் ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்ற முழு நம்பிக்கையோடு வேதஜோதிடம் முன்னேறுகிறது.


நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி