-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, December 16, 2013

காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.


காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.

தனக்கு வரவிருக்கும் குடும்பத் துணையை தானே தேர்ந்தெடுத்தல் காதல் திருமணமாகும். அதே துணையை பெற்றோரோ அல்லது மற்றவர்களோ தேர்ந்தெடுத்துக் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் என்ற ஒரு உணர்வு ஏற்படுவதற்கு மனமும் சூழ்நிலைகளும் காரணமாக அமைகின்றன. பயமும் தைரியமும் மனத்தின் வெளிப்பாடாகவும், நண்பர்களும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் சூழ்நிலையின் வெளிப்பாடாக அமைகின்றன.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஜோதிடம் முன்கூட்டியே தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறது. காதல் வசப்படுவதற்குரிய மனமும் சூழலும் எவ்வாறு அமையும் என்பதை ஜாதகம் எடுத்துக்காட்டிவிடும். மனம் மற்றும் சூழ்நிலை இந்த இரண்டிற்கும் ஜோதிட காரணிகள் என்ன என்பதைக் காணலாம்.

காதலுக்கு முக்கிய காரணியாக அமைவது மனம். அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். எதிர்ப்பு வரக்கூடிய செயல் என்று தெரிந்தும் அச்செயலைச் செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது தான் 3ம் இடம் தைரிய ஸ்தானம்.
காதலுக்கு மற்றொரு முக்கிய காரணி சூழ்நிலை, சூழ்நிலை என்பது நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம். ஜோதிடத்தில் புத்திசாலித்தனம் என்பது 5ம் இடமாகவும் காதலுக்குரிய வாய்ப்புகள் என்பது வாழ்க்கைத்துணைக்கான 7ம் இடமாகவும் கருதப்படுகிறது. கிரகங்களில் செவ்வாயும் சுக்கிரனும் புதனும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு களத்திரம் செவ்வாயாகவும் ஆண்களுக்கு சுக்கிரனாகவும் இருவருக்கும் உள்ள உறவு முறைகள் புதனாகவும் அமைகிறது.

மேற்கூறிய கிரகங்களும் பாவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும் பொழுது காதல் வயப்படுதல் நிச்சயம். அது திருமணத்தில் முடியுமா அல்லது ஒரு தலைக் காதலாகவே முடிந்துவிடுமா அல்லது காதல் வேறு திருமணம் வேறு என்ற நிலையைத் தருமா என்பதையெல்லாம் அவரவர் திசாபுத்திஅந்தர காலங்களை வைத்து கூறிவிடமுடியும்.

பொதுவாக மூன்றாம் இடத்தில் தேய்பிறைச் சந்திரனும், 5 மற்றும் 7ம் இடங்களில் செவ்வாய் சுக்கிரன் புதன் (ஏதேனும் ஒரு கிரகம் வக்கிரத்தில்) இருக்கக்கூடிய சூழ்நிலைகள் காதலிலும் திருமணத்திலும் வெற்றியைத் தருவதில்லை. திருமணத்தில் வெற்றி பெறும் ஜாதகங்கள் மட்டுமே காதலிலும் வெற்றி பெறும். அப்படி இல்லையென்றால் திருமண வாழ்க்கையோ அல்லது காதல் வாழ்க்கையோ விரைவில் முடிவுக்கு வந்து விடும். அதனால் ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் (குறைந்தபட்சம் ஒருவருடைய ஜாதகத்திலாவது) திருப்தியான மண வாழ்க்கைக்குரிய கிரக அமைப்புகள் இருந்தால் நிச்சயம் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் பெற்றோரிடம் பொறுப்பை ஒப்படைப்பது சிறந்த முடிவாகும். எதிர்ப்பால் சாதிக்க முடியாததை அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சாதிக்க முடியும்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி