-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, October 20, 2012

காலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்.

காலம் – யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்பொழுதும் நிகழ்காலம் இல்லை. இச்சனப் பொழுது என்பது கூட கடந்த காலம் தான். அப்படி ஓடிக்கொண்டிருக்கும் காலத்தின் பிடியில் தான் அனைவருடைய வாழ்க்கையும் அடங்கியுள்ளது. ஒரு குழந்தை பிறப்பு என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. நினைத்த நேரத்தின் பிறப்பு நடப்பதில்லை. காலத்தின் கையில் தான் பிறப்பின் பிறப்பு நடக்கிறது. பிறந்த உடன் காலத்தின் ஓட்டம் இறப்பை நோக்கி ஓடுகிறது. இந்த ஓட்டத்தின் நடுவில் நடக்கும் நிகழ்வுகளைக் கூட காலம் தான் நிர்மாணிக்கிறது. 

காலத்தின் கையில் தான் எல்லாம் உள்ளது. நீங்கள் பெறவேண்டியதும் கொடுக்க வேண்டியதையும் நீங்கள் தீர்மானிக்கவில்லை காலம் தான் தீர்மானிக்கிறது. சரியான நேரத்தில் செய்யும் சரியான செயல் சரியான முடிவைத் தரும் என்பது காலத்தின் சட்டம். ஒவ்வொரு முடிவும் காலத்தின் போக்கில் எடுக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது திருப்தியைக் கொடுக்கும். காலத்தின் போக்கை புரிந்து கொண்டவர்களால் தான் காலத்தின் போக்கில் செயல்பட முடியும்.

காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும். அது தான் வெற்றிக்கான காலம் என்பதை உணர வேண்டும். அதற்கான சூழ்நிலைகளை காலம் உருவாக்கித் தரும். உண்மையான வெற்றியும் தோல்வியும் செயல்களில் அல்ல காலங்களில் தான் உண்டு. மழழைப் பேச்சில் உள்ள தவறுகள் கூட குழந்தைப் பருவத்தின் வெற்றியாகும். அதே செயல்கள் காலங்கள் ஓட ஓட தவறாகிவிடுகிறது. அந்தப் புரிதல் தான் உண்மையான வெற்றி.

காலம் மனிதனைக் காக்க வைக்கிறது. எந்த ஒரு செயலும் தகுந்த காலத்திற்கு முன் செய்யமுடிவதில்லை. அதேசமயம் தகுந்த காலம் கடந்தபின்பும் செய்யும் செயல்கள் பலன்கள் தருவதில்லை. அதனால் செயலுக்கு தகுந்த காலம் எது என்பதை தேர்ந்தெடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.

சூழ்நிலைகளைக் காலம் உருவாக்குகிறது. அந்த சூழ்நிலைகளைக் காரணம் காட்டித்தான் செயல்கள் நடைபெறுகின்றன. அந்த சூழ்நிலைகளைப் பொருத்துத்துத்தான் வெற்றி தோல்வி அமைகிறது. இருபது வருடத்திற்கு முந்தைய கண்டுபிடிப்பு இன்று காலாவதியாகிவிட்டது. அன்றைய காலத்தின் தேவை இன்று தேவையற்றதாகிவிட்டது. அன்றைய சூழ்நிலை அதைப் புதிது என்று ஏற்க வைத்தது. இன்றைய காலம் அதைக் காலாவதியாக்கிவிட்டது. செயல்களின் நிலை ஒன்று தான் ஆனால் காலம் அதை ஏற்கவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும். தனிமனிதன் செயல்கள் காலத்தை ஒட்டியே தான் அமைய வேண்டும். பிறப்பு, கல்வி, திருமணம், தொழில், புகழ், இறப்பு இப்படி அனைத்து செயல்களும் காலத்தை ஒட்டியே தான் நடக்கப் பெற வேண்டும். மாறினால் அதன் விளைவுகள் திருப்தியாக இருக்காது.


இப்படி செயல்படும் காலம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. மனிதனின் ஜனனத்திலிருந்து தான். காலம் துவங்கிய கணக்கு பிறந்த நொடிப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த நொடிப்பொழுது தான் மனிதனின் நிகழ்காலம் அதைத் தான் ஜோதிடம் ஏற்று செயல்படுகிறது. அந்த ஜெனன நேரம் தான் உங்களின் காலத்தைக் கூறவல்லது. காலத்தைக் கூறுமேயன்றி மாற்றாது. அதாவது பிறந்த நேரத்தைவைத்து காலத்தைக் கணக்கிட வேண்டும். அது தான் ஜோதிடம். காலம் சூழ்நிலைகளை உருவாக்கும். சூழ்நிலைகளை உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால் காலம் தரும் வெற்றிகளை நாம் அனுபவிக்கமுடியும்.அப்படி செய்யவில்லை என்றால்? காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. சூழ்நிலைகளை உணராதவன் தன்னை உணருவதில்லை.  காலத்தை உணராதவன் செயல் எப்பொழுதும் வெற்றியைத் தருவதில்லை.
அந்த சூழ்நிலைகள் அமையும் காலத்தைத் தான் ஜோதிடம் கூறுகிறது. திசை புத்தி அந்தரம் என்ற காலக் கணக்கீடுகள் வாயிலாக ஒருவருக்கு அமைய இருக்கும் சூழ்நிலைகளை முன்கூட்டியே எடுத்துரைக்கிறது. அதைப் புரிந்தால் வெற்றி பெறலாம்.

அனைவருக்கும் ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் தான். அதில் தான் ஒருவர் கோடிஸ்வரர் ஆகிறார். ஒருவர் ஞானியாகிறார், ஒருவர் அடுத்தவர்களால் ஏளனப் பார்வைக்கு ஆளாகிறார். காரணம். காலத்தைப் பயன்படுத்தியவர்கள் அதாவது சூழ்நிலைகளைப் பயன்படுத்தியவர்கள் வெற்றி பெற்றவர்களாகிறார்கள்.

மரணம் நிச்சயயிக்கப்பட்ட ஒன்று தான். அது எப்பொழுது என்று தெரியாதது தான் மனிதனின் பலம் அதே தான் பலவீனமும். மரண தண்டனைக்கான தேதி தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒருவரின்  மன நிலை எப்படி இருக்கும்?. சாதாரண மனிதனின் மனநிலையைவிட அமைதியாக இருக்கும். காரணம் வாழ்க்கையின் முடிவை தெரிந்து கொண்டதால் அந்தக் காலத்தை உணரந்ததால் அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டதால் ஏற்படும் அமைதி.

இப்படி ஒவ்வொரு சூழ்நிலைகளையும் நாம் உணர்ந்து கொண்டால் அதன் விளைவுகள் நம்மை பெரிதும் பாதிக்காது. அது வெற்றியானாலும் சரி தோல்வியானாலும் சரி. அந்த சூழ்நிலைகளைத் தான் ஜோதிடம் கூறுகிறது.

அதற்காக அனைவரும் ஜோதிடம் பார்த்து சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் வெற்றி பெற்றுவிட்டால் யார் யாரிடம் தோற்பது?. வெற்றி தோல்வி என்பது செயல்கள் தரும் விளைவுகளின் ஒப்பீடு தான். தானம் செய்வதற்கும் திருட்டுக் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டிலும் பொருள் இழப்பு தான். ஆனால் தானம் என்பது தான் விரும்பிச் செய்வது. திருட்டுப் போவது எதிர்பாராமல் நடப்பது. இது தான் காலத்தின் நிலையைப் புரிந்து கொள்ளுதல். இந்த மனநிலையில் யாரும் யாரிடமும் தோற்பதேஇல்லை. காலம் அனைவரையும் திருப்திப் படுத்தும். ஜோதிடம் அதை எடுத்துக்கூறும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி