-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, September 26, 2012

ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.

ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.
திருக்குறளும் ஜோதிடமும்.

திருக்குறள் போன்று ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான். உலகப் பொதுமறை என்பதற்கு உலகத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவானது என்று பொருள் கொண்டால் திருக்குறளும் ஜோதிடமும் ஒன்று தான்.

மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் உலகப் பொதுமறை திருக்குறள். அதனால் தான் மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் திருக்குறள் நிறைந்துள்ளது. அது தமிழ் உலகுக்கு தந்த கொடை. மதம் சாராதது என்பதற்காகத்தான் ஆதிபகவன் என்ற வார்த்தையை பொதுவாகக் கொடுத்தது திருக்குறள்.

திருக்குறளுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்றால் ஜோதிடமும் ஒரு உலகப் பொது மறைதான். மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் ஜோதிடம். ஆனால் இன்று அது ஒரு மதம் சார்ந்தது என்ற கோட்பாடு நிலவுகிறது. அது தவறு. தமிழ் தந்ததால் திருக்குறள் என்ன தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா சொந்தமாகிறது? இல்லை திருக்குறள் உலகம் தழுவியது. அது போலத்தான் ஜோதிடமும். ஜோதிடத்தை யார் தோற்றுவித்தார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விடுத்து பார்த்தால் அது உலகம் தழுவியது தான். உலகில் எங்கு மனிதன் பிறந்தாலும் அவனுக்குரிய பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொதுவானது தான் ஜோதிடம். அப்படி என்றால் திருக்குறளும் ஜோதிடமும் உலகப் பொதுமறை தானே.

உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை என்றளவிற்கு அனைத்து துறை தொடர்புடைய கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருக்குறளில்
ஜோதிடம் தொடர்பான கருத்துக்களையும் ஜோதிடத்தின் பார்வையில் திருக்குறளையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

ஜோதிடத்தின் மூலம் என்ன என்றால் மனிதன் பிறப்பிற்கு மனிதனே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அது தான் அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. திருக்குறளும் இதைத் தான் ஊழ் என்று குறிப்பிடுகிறது.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் – குறள் 380

இதன் பொருள் என்ன? பரிமேலழகர் உரையின் படி தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்.  இதனை எளிமையாக கூறுவது என்ன என்றால் விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு எவையும் வலிமையானவை அல்ல என்று திருக்குறள் கூறுகிறது. இதே கருத்தைத் தான் ஜோதிடம் முன்நிறுத்துகிறது. விதிப்படி தான் எல்லாம் நடைபெறும். விதியை மாற்றக்கூடிய சக்தி இல்லை. ஆனால் அவற்றை அறிந்துகொள்ளக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது. அது தான் ஜோதிடம். விதியையை அறிந்து பின் அவ்விதியை அனுபவிக்கக் கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதைத் தான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள். 377

என்கிறது திருக்குறள். வகுத்தான் என்ற வார்த்தைக்கு பொருள் கூறும் போது பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்றால் ”ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்” இப்படி ஊழ் அதிகாரம் முழுவதும் விதியின் விளைவுகளைக் கூறுகிறது. அதாவது ஜோதிடத்திற்கு துணை நிற்கிறது.

திருக்குறளில் ஜோதிடத்தின் தாக்கம்…தொடரும்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி