-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, September 4, 2012

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

மரணம் .. பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட ஒன்று. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்வது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான என்றாவது ஒருநாள் சந்திக்கக்கூடிய நிகழ்வுதானே அதற்காக ஏன் பயப்பட வேண்டும். நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை நாமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. வரும் போது நாம் எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போதும் எதுவும் உடன் வரப் போவதில்லை பிறகு ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும். மரணம் ஒன்றும் புதிதல்லவே. நமக்கு முன்னாலே நிறைய பேர் நமக்கு பின்னால் அனைவரும் வரத்தானே போகிறார்கள் பிறகு ஏன் பயப்படவேண்டும்.

இந்த வேதாதங்கள் எல்லாம் கேட்கச் சரியாகத்தான் உள்ளது. இருப்பினும் மிகக் கொடிய இந்த பயம் ஏன் மனிதனுக்கு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க என்ன வழி? ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா? இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா? மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா? இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும்? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவில்லை ஏன்?. இதற்கு விடை எங்குதான் உள்ளது?. இவற்றிற்கெல்லாம் ஒருவரியில் பதில் கூற வேண்டுமானால்

மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பழகிக் கொள்ளுங்கள் என்பது தான். பழகிக் கொள்ள இது என்ன அடிக்கடி செய்யும் செயலா? எப்படி பழகுவது?. பழகுவது என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்வது. அப்படி பழகுவதால் அதன் மீது நமக்கு பயம் குறைகிறது. மரணம் ஒன்றும் நாம் செய்யும் செயலல்லவே, நம்மீது திணிக்கப்படும் ஒரு செயல் தானே, நாம் எவ்வாறு பழகுவது?. மரணத்தைப் பழக வேண்டாம். மரணத்தின் விளைவுகளை பழகிக் கொள்ளலாமே.

பயம் எதனால் வருகிறது? நம்மை மீறி எதுவும், நமக்கு பிடிக்காதது எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தான் பயம். பயத்தின் விளைவுதான் மற்ற உணர்ச்சிகள். பயந்தவன் வலுவானவானால் அடுத்தவர்களை காயப்படுத்துகிறான். வலுகுறைந்தவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். மற்ற பயங்களைவிட மரணபயம் தான் மிகவும் கொடியதாகிறது. காரணம் மற்ற பயங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். மரணத்தை வெல்ல முடியாது என்ற எண்ணம் பயத்திற்கு வலு சேர்க்கிறது.

பயம்… கடந்தகாலத்தைப் பற்றி யாரும் பயப்படுவதில்லை. அனைவரும் எதிர்காலத்தைப் பற்றியே பயப்படுகிறோம். ஏன்.? நடந்து முடிந்த செயல்களின் விளைவுகளை நாம் அனுபவித்துவிட்டோம். ஆனால் நடக்க இருப்பதின் விளைவுகளை கற்பனை செய்கிறோம். நல்ல கற்பனை கூட நடக்குமா என்ற எண்ணம் வரும் போது பயம் வரத்தான் செய்கிறது. இதனைப் போக்க என்ன செய்வது?


நடக்க இருக்கும் செயல்களின் மீது முழுநம்பிக்கை வைப்பது. எப்பொழுது நம்பிக்கை வலுப்பெறும்?. எது நடக்கும் என்பது நிச்சயமாக தெரியவரும் போது. செயல்களின் மீது நம்பிக்கை வரும். முழுநம்பிக்கை வரும் போது செயல்களின் விளைவுகளை செயல்கள் நடக்கும் முன்பே நாம் உணரத் தொடங்கி விடுவோம். அதனால் உண்மையில் அந்தச் செயல் நடைபெறும் போது அதன் விளைவுகளின் பலன் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றானாதால் பயம் நீங்கி செயல்களின் மீது கவனம் செல்கிறது.

மரணம். திரும்பி வர முடியாத இடம். நாம் சென்று விட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? அவர்கள் போய்விட்டால் நம்மால் எப்படி வாழ முடியும்? இந்தக் கேள்விகளை முன்கூட்டியே நாம் கேட்டுக்கொண்டால் அதற்குரிய பதிலை நாம் செயல்வடிவில் கொண்டுவரும் போது மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதைத்தான் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் இல்லையென்றாலும் என்னால் வாழமுடியும், அதே போல நான் இல்லையென்றாலும் அவர்களாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மரண பயத்தைப் போக்க வல்லது.

எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி இவையெல்லாம் எப்பொழுது நடக்கும்?.

ஜோதிடத்தை உணருங்கள் உண்மை தெரிய வரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி